இந்தியா

அனுமதி மறுப்பு: தடுத்து நிறுத்தும் இடத்தில் தர்ணா- மம்தா பானர்ஜி

போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தன்னை தடுத்து நிறுத்தும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறார்கள். அதற்கு மேலாக இரண்டு எம்.பி.க்கள் தாக்கப்பட்டனர். இதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ரெயில்வே நடைபாதையில் உள்ள கடைகளை அகற்ற பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கும் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்த மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தபோதிலும், தர்ணா போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மக்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? மக்கள் ஏன் பதற்றமடைகிறார்கள்? ஒட்டுமொத்தச் சூழலே மாறிவிட்டது. கொல்கத்தாவும் வங்காளமும் ரவுடிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. ஜனநாயகப் போராட்டங்கள் தடுக்கப்பட்டு வந்தன.

தர்ணா நடத்த எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், நான் எங்கே தடுக்கப்படுகிறேனோ அங்கேயே அமர்வேன். கைதாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.