இந்தியா

மம்தா பானர்ஜி மக்களால் நீக்கப்பட்டார்: அமைச்சர் சங்கர் கோஷ் குற்றச்சாட்டு!

"மக்களை ஏமாற்றிய மம்தாவை மக்களே வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்" என்றும், இனி மாநிலத்தில் கல்வி, கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றை வளர்க்கும் உண்மையான மக்கள் ஆட்சி நடைபெறும் என கூறியுள்ளார்"

மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய பாஜக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சங்கர் கோஷ், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. பாஜக பெரும்பான்மை பெற்று முதல் முறையாக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி தன்னுடைய சொந்த தொகுதியிலும் தோல்வியடைந்தார். இதையடுத்து மாநில அரசியல் சூழல் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி மற்றும் உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல எம்.எல்.ஏ.க்கள் தலைமையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்து மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையை மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சங்கர் கோஷ் கூறியதாவது: மம்தா பானர்ஜியை பதவியிலிருந்து நீக்கியது எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்ல, மாறாக மேற்கு வங்காள மக்களே தங்களின் வாக்குகள் மூலம் அவரைத் தூக்கி எறிந்துள்ளனர். மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டு ஆட்சியில் மம்தா அரசு மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்கத் தவறிவிட்டது. பள்ளிப் பாடப்புத்தகங்களில் நாட்டின் பெருமைகளுக்குப் பதிலாக, சிங்கூர் மற்றும் நந்திகிராம் போன்ற அரசியல் போராட்டக் களங்களை மட்டுமே பாடத்திட்டமாகச் சேர்த்திருந்தனர்.

இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே எங்கள் அரசின் முக்கிய நோக்கம். . "மக்களை ஏமாற்றிய மம்தாவை மக்களே வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்" என்றும், இனி மாநிலத்தில் கல்வி, கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றை வளர்க்கும் உண்மையான மக்கள் ஆட்சி நடைபெறும் என கூறியுள்ளார்.

தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பிறகும் மம்தா பானர்ஜி தானாக முன்வந்து பதவி விலக மறுத்ததால், கடந்த மே மாதம் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய அமைச்சரவையில் சிலிகுரி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான சங்கர் கோஷ் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், மம்தா மீது பாஜக அமைச்சர் வைத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.