மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு தரப்பு மோதல், வாக்குப்பதிவு இயந்திர கோளாறு உள்ளிட்டவற்றால் சில இடங்களில் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தெற்கு 24 பர்ஹானாஸ் மாவட்டத்தில் டயமண்ட் ஹார்பர் நகரில் உள்ள பால்டா தொகுதியின் பல வாக்குச்சாவடிகளில், பாஜகவிற்கு வாக்களிக்கும் பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டு, மக்கள் வாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி உடைய தொகுதி ஆகும்.
இதுதான் அபிஷேக் பானர்ஜி தனது தொகுதியில் பின்பற்றும் தேர்தல் முறைகேடு மாடல் என்று பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.
இந்த பூத்துகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா, இது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்று கூறியுள்ளார்.
தோல்வி பயத்தில் பாஜக இது போன்ற புகார்களைக் கூறி அழுது கொண்டிருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
மாநிலத் தேர்தல் தலைமை அதிகாரி மனோஜ் அகர்வால், இது போன்ற புகார்கள் வரும் இடமெல்லாம் உடனடியாகக் கவனிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் அங்கு மருவாக்குபதிவு நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.