இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் புதிய மைல்கல்லாக, தனியார் நிறுவனங்களால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் PSLV ராக்கெட், 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனங்கள் இணைந்து PSLV N1 ராக்கெட்டை தயாரிக்க முடிவு செய்தது. இந்தக் கூட்டமைப்புக்கு ஐந்து PSLV ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL), கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.860 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தியாவின் நம்பகமான செயற்கைக்கோள் ஏவுகணையான PSLV-யை இதுவரை இஸ்ரோவின் மேற்பார்வையில் தொழில்துறை நிறுவனங்களின் உதவியுடன் தயாரித்து வந்தனர். தற்போது முழுமையான தயாரிப்புப் பொறுப்பு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதல் தனியார் தயாரிப்பு PSLV-N1 ராக்கெட் மூலம் EOS-10 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த முயற்சி மூலம் செயற்கைக்கோள் ஏவுதலில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தியாவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின்படி, முதல் ஏவுகணையை இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், மற்றவற்றை ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியிலும் ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கால அட்டவணையின்படி, முதல் ஏவுகணை 2024-ம் ஆண்டிலேயே ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஐந்து ஏவுகணைகளும் 2026-ம் ஆண்டிற்குள் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் இந்தியா சர்வதேச விண்வெளி மாநாட்டில் (India International Space Conclave) பேசிய L&T பிரசிஷன் இன்ஜினியரிங் அண்ட் சிஸ்டம்ஸ் (L&T Precision Engineering & Systems) பிரிவின் மூத்த துணைத் தலைவரும் அதன் தலைவருமான ஏ.டி. ராமச்சந்தனி, பேலோடு (payload) ஒருங்கிணைப்பு மற்றும் ஏவுதலுக்கு கிடைக்கும் கால இடைவெளி (launch window) தொடர்பான பல்வேறு சிக்கல்களே இந்த தாமதத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.