இந்தியா

மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சுனேத்ரா!

பாராமதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 2.18 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் சுனேத்ரா சாதனை வெற்றி படைத்துள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவருமான சுனேத்ரா பவார், திங்களன்று நடைபெற்ற பாராமதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 2.18 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றார். தனது மறைந்த கணவர் அஜித் பவாரின் வாக்குகள் 1.65 லட்சம் என்ற வெற்றி சாதனையையும் தனது அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தால் முறியடித்துள்ளார்.

வெற்றி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் சுனேத்ரா அஜித் பவார் புதன்கிழமை அன்று உப்ரஷ்டிரபதி பவனில் இந்தியத் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மே 6 முதல் அமலுக்கு வரும் வகையில் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்ததற்காகவும், தேசிய அளவில் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்காகவும் மகாராஷ்டிர மக்களுக்கு நன்றியுள்ளவராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் பொது வாழ்வில் தனது தொடர் பயணத்திற்கு வழிகாட்டினார் எனவும், அதற்காக என்றென்றும் நன்றியுள்ளவராக இருக்கிறேன் என சுனேத்ரா தெரிவித்துள்ளார்.