அபிஜித் தீப்கே 
இந்தியா

அமைச்சர்களின் நாய்களுக்கு கூட நல்ல வசதி உள்ளது.. அரசுப் பள்ளிகளின் அவல நிலை - மகாராஷ்டிர கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் - அபிஜித் தீப்கே

இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.

மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைவுக்கு பொறுப்பேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா பூசே பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள அவுசா தாலுகாவில் உஜானி என்ற கிராமம் அமைந்துள்ளது.

இங்குள்ள அரசுப் பள்ளியை நேற்று பார்வையிட்ட பிறகு தீப்கே செய்தியாளர்களை சந்தித்தார்.

நாய்களுக்கு நல்ல வசதி

அப்போது பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.

சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.

போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள்.

அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம்.

அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

ஆபத்தில் மதம்

அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.

ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ராஜினாமா செய்

தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.

பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில் சிஜேபி கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.