மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள எட்ஷி கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எட்ஷி கிராமத்தில் வசிக்கும் உத்தம் தியம்பக் கரண்டே என்பவருக்குச் சொந்தமான வீட்டின் தரைதளத்தில் மளிகைக் கடை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய அந்த குடும்பத்தினர் நள்ளிரவு வரை விழித்திருந்துள்ளனர். இந்நிலையில், அதிகாலை இரண்டரை மணியளவில் வீட்டின் கீழ்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளிகைக் கடையில் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெய் டப்பாக்கள் மற்றும் நெய் கேன்கள் தீ விரைவாகப் பரவக் காரணமாக அமைந்தன.
கீழ்தளத்தில் பற்றிய தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியதால், அங்கே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். தடிமனான புகை மண்டலம் வீடு முழுவதும் சூழ்ந்ததன் காரணமாக நால்வர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும் இருவர் தீயில் சிக்கி பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உத்தம் தியம்பக் கரண்டே (75), அவரது மனைவி சந்திரகலா உத்தம் கரண்டே (70), மகன் கோவிந்த் உத்தம் கரண்டே (47), மருமகள் ஜோதி கோவிந்த் கரண்டே (42) மற்றும் பேத்திகளான காயத்ரி (16), சித்தி (15) ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் வீட்டில் இருந்த மற்றொருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வீட்டின் அருகில் எரியவிட்ட தீபத்திலிருந்து தீ விபத்து பரவியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது, எனினும் தீ விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் கிராம மக்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக தாராஷிவ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி திருநாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கண்ணீரை வரவழைத்துள்ளது.