நிலநடுக்கம்  
இந்தியா

மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4:29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 5:32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.

பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

முன்னதாக 3 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 1 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல பிரதேசம்

இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று காலை 6.36 மணியளவில் பூமிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான்

இந்தியாவை தவிர்த்து ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4.41 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.