சௌரப் சந்திரகரின் அதீத ஆடம்பர வாழ்க்கை முறையே புலனாய்வு அதிகாரிகளின் கவனத்தை அவர் மீது திருப்பியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் ரூ.200 கோடி செலவில் இவர் நடத்திய பிரம்மாண்டத் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியில் மாதம் ரூ.15,000 சம்பளத்திற்கு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த சௌரப் சந்திரகர், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்லைன் சூதாட்ட சாம்ராஜ்யத்தை துபாயில் இருந்து இயக்கி வந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'மகாதேவ் பெட்டிங் ஆப்' மூலம் சுமார் ரூ.94,400 கோடி ரூபாய் வரை சட்டவிரோதப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இவரது நெட்வொர்க் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் ஓமனில் கைது செய்யப்பட்ட சௌரப் சந்திரகர், தற்போது சிபிஐ அதிகாரிகளால் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள குடும்பச் சொந்தமான ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்த சௌரப் சந்திரகர், தனது கூட்டாளி ரவி உப்பலுடன் இணைந்து ஆன்லைன் சூதாட்ட செயலியை உருவாக்கினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தச் சூதாட்ட வலைப்பின்னல், பின்னர் இந்தியா மற்றும் துபாய் முழுவதும் கிளை பரப்பியது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையின்படி, மகாதேவ் செயலி மற்றும் அதனுடன் தொடர்புடைய தளங்கள் வழியாக மட்டும் சுமார் ரூ.94,400 கோடி வரை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஹவாலா மற்றும் போலியான பினாமி வங்கிக் கணக்குகள் மூலம் இந்தத் தொகை கோடிக்கணக்கில் கையாளுயுள்ளது.
சௌரப் சந்திரகரின் அதீத ஆடம்பர வாழ்க்கை முறையே புலனாய்வு அதிகாரிகளின் கவனத்தை அவர் மீது திருப்பியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் ரூ.200 கோடி செலவில் இவர் நடத்திய பிரம்மாண்டத் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தத் திருமண விழாவில் கலந்துகொள்ள பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் பலர் சிறப்பு விமானங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். துபாயில் சொகுசு வில்லாக்களை வாங்கியதுடன், பசிபிக் தீவு நாடான வனவாட்டு நாட்டின் கடவுச்சீட்டையும் அவர் பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் பதுங்கி இருந்த சௌரப் சந்திரகரைப் பிடிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தன. போலியான பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் ராயல் ஓமன் காவல்துறையினரால் இவர் பிடிபட்டார். இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ஓமன் சென்று அவரைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வந்துள்ளனர். ராய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள இவரிடம், பொதுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் மற்றும் சர்வதேச ஹவாலா நெட்வொர்க் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.