இந்தியா

குடும்பச் சூழல், மன அழுத்தம்.. தன் பிறப்புறுப்பை வெட்டி கிணற்றில் வீசிய விவசாயி

மூத்த மகளுக்கு வரும் ஜூன் 25 அன்று திருமணம் நடக்கவிருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் கோடாரியால் தனது பிறப்புறுப்பை வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் மகாராஜ்பூர் பகுதியில் வசித்து வரும் 42 வயதான அந்த விவசாயிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ளார்.

இதற்கிடையில், அவரது மூத்த மகளுக்கு வரும் ஜூன் 25 அன்று திருமணம் நடக்கவிருந்தது. ஒருபுறம் மனைவியின் மருத்துவச் செலவு, மறுபுறம் மகளின் திருமணப் பொறுப்பு, இவற்றுடன் கடுமையான பண நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவரை மண அழுத்தத்தில் தள்ளியுள்ளன. தான் நிறைய பாவங்கள் செய்துவிட்டதாகவும் நம்பியுள்ளார்.

இந்த நிலையில் தான் குடும்பப் பொறுப்புகளில் இருந்தும், தான் செய்ததாக நினைக்கும் பாவங்களில் இருந்தும் விடுபட்டு பாபாவாக மாற வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

தனது பிறப்புறுப்பே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம் என கருதி, அதனைத் துண்டிக்கத் துணிந்துள்ளார்.

நேற்று காலை தனது வயலில் உள்ள கிணற்றின் அருகே சென்று தனது பிறப்புறுப்பை கோடாரியால் வெட்டி அதனுள் வீசியுள்ளார்.

கடுமையான ரத்தப்போக்கு ஏற்படவே அவரே தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வயலுக்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கடுமையான ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்பொழுது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.