இந்தியா

தேர்தலில் வென்ற தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு

முதலமைச்சர் விஜய் காங்கிரசையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது. வரும் காலங்களிலும் இந்தக் கூட்டணியே தொடரும் என அறிவித்தது.

ஏற்கனவே ஆட்சியில் பங்கு என உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய் காங்கிரசையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வார் என கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஒரு மேல்சபை எம்.பி. பதவியும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ.க்களை மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ராகுலைச் சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்தித்தனர்.