இந்தியா

நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், பென் கேமராக்களை தவிர்க்கவும்: எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்

பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூடவுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வரும்போது எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வரும்போது எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் மட்டுமின்றி ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமரா பேனாக்கள் போன்ற நவீன மின்னணு சாதனங்களை தவிர்க்க வேண்டும் என மக்களவை செயலகம் அறிவுறுத்து உள்ளது.

இத்தகைய நவீன சாதனங்கள் நாடாளுமன்றத்தின் ரகசியங்கள் மற்றும் உறுப்பினர்களின் தனி உரிமைகளை பாதிக்கக் கூடும் எனவும் மக்களவை செயலகம் எச்சரித்துள்ளது.