இந்தியா

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு

கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 4 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.

எதிர்க்கட்சிகள் 5-வது நாளாக அமளி

இந்நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல இரு அவைகளும் கூடின.

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ஆனாலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார்.

கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன் என அறிவித்தார்.

ராகுல் காந்தியிடம் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்

இதற்கிடையே, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்தார்.

ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கிரண் ரிஜிஜூ, அவை நடவடிக்கைகள் சுமுகமாக தொடர ஒத்துழைக்குமாறு நேரில் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் விவாதத்தை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

மக்களவை ஒத்திவைப்பு

எனினும், பகல் 12 மணிக்கு ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜகதாம்பிகா பால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அமளி தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.