2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், கர்நாடகாவின் தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உட்பட 16 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான பாஜக-வின் யோகேஷ் கவுடா, ஜூன் 15, 2016 அன்று தார்வாட்டில் உள்ள அவரது ஜிம்மில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஆரம்பத்தில் உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை விசாரித்த நிலையில், 2019ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் அனைத்து தரப்பு சாட்களின் விசாரணையும் முடிந்தநிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், ஏப்ரல் 15 அன்று வினய் குல்கர்னி உட்பட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யோகேஷ் கவுடாவுக்கும், வினய் குல்கர்னிக்கும் இடையே எழுந்த அரசியல் விரோதம் மற்றும் நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.