இந்தியா

ஜூலை 3ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை: ஏற்பாடுகளை பார்வையிட்ட மனோஜ் சின்ஹா

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற புனித யாத்திரையில் பல லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆளுநர் மாளிகையில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 28-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும். இந்த யாத்திரை மொத்தம் 57 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.