வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூட்டுப் போராட்டம் நடத்த இந்தியக் கூட்டணி முடிவெடுத்துள்ளது.
எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் முறைகேடு தொடர்பாக டெல்லியில் கூட்டணி தலைவர்களுடன் மூன்றரை மணி நேரக் கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்று (புதன்கிழமை) போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே மற்றும் பல தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் பின் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, "ராகுல் காந்தி சொல்வது சரிதான் என்பதை இப்போது அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடி முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். இப்போது அவர் மக்களின் வாக்குகளையும் பறிக்கிறார்.
அக்டோபர் 2 முதல் 8 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு 'ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற தலைப்பில் பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குப் பேரணியாகச் செல்வார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும், 'வாக்கு திருடும் அரசாங்கத்திற்கு' எதிராக மனு தாக்கல் செய்யவும் அவகாசம் கோருவார்கள்.
அதுமட்டுமின்றி ஐந்து பெரிய பேரணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேதியும் இடமும் விரைவில் இறுதி செய்யப்படும்.
நவம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடைபெறும்
எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக கூட்டணி முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்களில் அரசாங்கங்களை அமைப்பதற்காக பாஜக, தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சதி செய்ததாக கார்கே குற்றம் சாட்டினார்.
"ஞானேஷ் குமார் ஒரு திருடன் மற்றும் ரவுடி என்பது அம்பலமாகியுள்ளது. அவர் மக்களின் வாக்குகளைத் திருடியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்துள்ளார். அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.
ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், ஒரு மாபெரும் இயக்கம் முன்னெடுக்கப்படும். நாங்கள் போராடுவோம், வெற்றி பெறுவோம். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம்' என கார்கே எச்சரித்தார்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல்களை நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டுகள் மூலமே நடத்த வேண்டும் என்பதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் 100 சதவீதம் உடன்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், பதவியில் இருக்கும் 'வாக்கு திருட்டு அரசாங்கத்தால்' இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.