திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கேட்டுகளும் பூட்டப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஒரு வயதுடைய சிறுத்தை ஒன்று பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் உள்ள மரத்திற்கு தாவியது. பின்னர் சிறுத்தை பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்தது. இதனை அறியாத பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று காலை கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த சிறுத்தை ஊழியர்களை தாக்க முயன்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அறைகளுக்குள் சென்று கதவுகளை மூடிக் கொண்டனர். ஊழியர்கள் அனைவரும் சத்தமாக கூச்சலிட்டதால் சிறுத்தை அங்குள்ள கழிவறைக்குள் சென்றது. ஊழியர்கள் கழிவறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் அனுமன் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கூண்டு வலைகள் மற்றும் மயக்க ஊசியுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிப்பட்ட சிறுத்தையை வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சில நாட்கள் வைத்திருந்து பின்னர் சேஷாசலம் வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் அருகே 3 சிறுத்தைகள் சுற்றித்திரிந்து வந்தது ஏற்கனவே ஒரு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிறுத்தை பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.