மரண தண்டனையை குறைக்கும் மென்மையான அணுகுமுறையால் நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதில் நீதிமன்றத்தின் தாராளமயமான அணுகுமுறையால் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை நேற்று நீதிபதி திபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது இந்த கருத்தைத் தெரிவித்தது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் உச்ச நீதிமன்றத்தின் "மன்னிக்கும் குணம்" அல்லது தாராளமய அணுகுமுறையால் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக நீதிபதி திபங்கர் தத்தா வாய்மொழியாக குறிப்பிட்டார்.
இதற்கு ஒரு கட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்பு கொலை வழக்குகளில் தண்டனை வழங்குவது 'அரிதிலும் அரிதான வழக்குகள்' என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது, ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, அவர் தன் மற்றொரு இளைய குழந்தையை கொலை செய்யவில்லை என்ற காரணத்தை காட்டி உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்த ஒரு பழைய நிகழ்வை நீதிபதி தத்தா இந்த விசாரணையின் போது நினைவு கூர்ந்தார்.