இந்தியா

டெல்லியில் நடுவானில் விமானத்தில் என்ஜின் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்

அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர்.

புதுடெல்லி:

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லடாக்கின் லேவுக்கு இன்று காலை 6.45 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 150 பேர் பயணம் செய்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் 2-வது என்ஜினில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதனால் அவசர தரையிறக்கத்துக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரினர். உடனே டெல்லி விமான நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.