ஐபிஎல் தொடரின் நிர்வாகத்தில் எழுந்த நிதி முறைகேடு மற்றும் பணமோசடி புகார்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு மே மாதம் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறினார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான லலித் மோடி, தான் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் குடியுரிமை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். கடந்த 2026 செப்டம்பர் 15-ஆம் தேதியே பிரிட்டன் குடியுரிமைக்கான சான்றிதழைப் பெற்றுவிட்டதாகவும், இது தனது வாழ்க்கையின் மிகவும் பெருமைக்குரிய மற்றும் தனிப்பட்ட மைல்கல் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நேற்று புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றியபோது, இந்தத் தகவலை அவர் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார். மேலும், தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் இது குறித்த விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
தனது குடியுரிமை விழாவை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடியதாக லலித் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் பல ஆண்டுகளாகத் தனது தாயகமாக இருந்து வருவதாகக் கூறியுள்ள அவர், அந்நாட்டின் மக்கள், ஜனநாயக அமைப்புகள், பாரம்பரியம் மற்றும் விழுமியங்கள் மீது தனக்கு ஆழ்ந்த மரியாதையும் வியப்பும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் குடிமகனாக மாறியிருப்பது ஒரு கவுரவம் மட்டுமல்ல, அது ஒரு பெரிய பொறுப்பு என்றும், அதனைப் பெருமையுடனும் நன்றியுணர்வுடனும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கலாச்சார அனுபவங்களால் செதுக்கப்பட்ட தனது வாழ்க்கைப் பயணத்தில், தான் இப்போது பெருமையுடன் தாயகம் என்று அழைக்கும் பிரிட்டனுக்குத் தொடர்ந்து நேர்மறையான பங்களிப்புகளை வழங்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாளன்று இந்த முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்து கொண்டது தனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்று லலித் மோடி நெகிழ்ந்துள்ளார். தனது உரையையும் சமூக வலைதளப் பதிவையும் பிரிட்டனின் பாரம்பரிய வாழ்த்து வாசகமான "கடவுள் மன்னரைக் காப்பாராக" என்ற வார்த்தைகளுடன் அவர் நிறைவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நிர்வாகத்தில் எழுந்த நிதி முறைகேடு மற்றும் பணமோசடி புகார்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு மே மாதம் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறினார். கடந்த 16 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த அவர், இதற்கு முன்பு தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு குடியுரிமையைப் பெற முயற்சித்ததும், பின்னர் அந்நாட்டுப் பிரதமரால் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீண்ட கால சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளுக்குப் பிறகு, தற்போது பிரிட்டன் குடியுரிமையை அவர் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளார்.