tmc-councillor-sanjay-das-dead 
இந்தியா

கொல்கத்தா: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட TMC கவுன்சிலர்- போலீஸ் தீவிர விசாரணை

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சஞ்சய் தாஸ் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தற்கொலையாக இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கு கொல்கத்தாவின் நாகர்பஜார் பகுதியில் வசித்து வந்த, அந்நகராட்சியின் கவுன்சிலர் சஞ்சய் தாஸ் (வயது 50), அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தெற்கு தும் தும் நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலரான தாஸ், பிதான்நகர் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கவுன்சிலரும், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிதி முன்ஷியின் கணவருமான தேப்ராஜ் சக்ரவர்த்தியின் நெருங்கிய உதவியாளராகத் திகழ்ந்தவராவார்.

அவரை உடனடியாக அங்குள்ள உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தற்கொலையாக இருக்கும் என்று முதற்கட்டமாகக் கூறினாலும், சம்பவத்தின் தன்மையை உறுதிப்படுத்தும் எந்தக் கடிதமும் இதுவரை மீட்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நாகர்பஜார் உள்ளூர் காவல் நிலையத்தில், ஒரு இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டாய உடற்கூறு ஆய்வு நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, தாஸின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக மனச்சோர்வுடன் காணப்பட்டதாகத் தாஸின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். எனினும், உயிரிழந்தவரின் மனநிலைக்குக் குறிப்பிட்ட காரணம் எதையும் உறுதியளிக்க இயலவில்லை.

வருமானத்திற்கு அதிகமான சொத்துச் சேர்ப்பு வழக்கு ஒன்றில் நேற்றைய முன்தினம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் அரசுப் பள்ளிகளில் தொடக்கக்கல்வி நிலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆள்சேர்ப்பு முறைகேடு, மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான வழக்குகளில் பல TMC கவுன்சிலர்கள் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக கைதாகிவருகின்றனர்.