கோபால் முகர்ஜி, சுவேந்து அதிகாரி  
இந்தியா

முட்டாள் கூட்டம்.. கொல்கத்தா சாலையின் பெயர் மாற்றம் - பாஜகவை கலாய்த்த காங்கிரஸ்

இந்த அறிவற்றவர்களுக்கு ஹசன் சுஹ்ராவர்டிக்கும் ஹுசைன் சுஹ்ராவர்டிக்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரியாது

மேற்கு வங்க தலைநகர் கோல்கத்தா நகரின் முக்கிய சாலையான சுஹ்ராவர்டி அவென்யூவை கோபால் முகர்ஜி சாலை என மாநகராட்சி பெயர் மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை பாராட்டி முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

"கொல்கத்தா மாநகராட்சி எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை நான் பாராட்டுகிறேன். இந்த முடிவு ஒரு வரலாற்றுத் தவறைச் சரிசெய்வதில் முக்கியப் பங்காற்றும்.

அப்பாவி மக்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டு, அரசு அதிகாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்திய ஒருவரின் பெயரை, பல தசாப்தங்களாக நமது நகரத்தின் முக்கியச் சாலை ஒன்று தாங்கி நின்றது.

ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைக் காக்கத் துணிச்சலுடன் முன்வந்த கோபால் முகர்ஜி அவர்களின் பெயரை இச்சாலைக்குச் சூட்டுவதன் மூலம், ஒரு உண்மையான பாதுகாவலரும் மீட்பருமான அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு, வரலாற்று ரீதியான நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

உண்மையான நாயகர்களை நினைவுகூரவும், தவறுகளைச் சரிசெய்யவும் வேண்டிய நேரம் இதுவே." என குறிப்பிட்டிருந்தார்.

முட்டாள் கூட்டம்

இந்நிலையில் சுவேந்துவின் இந்த பதிவை குறிப்பிட்டு பாஜக ஒரு முட்டாள் கூட்டம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பவன் கேரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த பாஜக உறுப்பினர்கள் ஒரு முட்டாள்களின் கூட்டம். இந்த அறிவற்றவர்களுக்கு ஹசன் சுஹ்ராவர்டிக்கும் ஹுசைன் சுஹ்ராவர்டிக்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரியாது" என்று விமர்சித்தார்.

மேலும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஜெயராம் ரமேஷ் தனது பதிவில், "இந்தச் சாலைக்கு பெயரிடப்பட்ட ஹசன் சுஹ்ராவர்டி, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.

அவருக்குப் பிறகு ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அப்பதவிக்கு வந்தார். அதே சமயம், ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தந்தையான சர் அஷுதோஷ் முகர்ஜி, அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பதவியை வகித்திருந்தார்.

ஆனால், அரசியல் அறிவியல் இதுபோன்ற விஷயங்களைக் கற்றுத் தருவதில்லை" என்றார்.

கோபால் பதா

கோபால் பதா என்று அறியப்படும் கோபால் முகர்ஜி கொல்கத்தாவில் இறைச்சிக்கடை நடத்தி வந்தவர் ஆவார்.

1946 இல் இந்து - முஸ்லீம்கள் இடையே வெடித்த மோதலின்போது படுகொலைகள் நிகழ்ந்தன. இதில் முஸ்லீம் எதிர்ப்பு இந்து கும்பலை வழிநடத்தியவர் கோபால் முகர்ஜி. இவரின் பெயரே தற்போது கொல்கத்தா சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.