மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் பாஜக 19 வேட்பாளர்கள் கொண்ட 3வது பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் தாய் பெயர் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மருத்துவ மாணவியின் தாய் மேற்கு வங்கத்தின் பானிஹாட்டி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் அவரும் அவரது கணவரும் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, "தேர்தலில் போட்டியிடுவது எனக்குப் பெருமையான விஷயம் அல்ல; இது ஒரு வலியுடன் கூடிய பொறுப்பு. நான் மக்கள் சேவை செய்தால் என் மகள் மகிழ்ச்சியடைவாள்.
நான் வெற்றி பெற்றால் அது பானிஹாட்டி மக்களின் வெற்றி. போராட மறந்துவிட்ட அல்லது குரல் கொடுக்க அஞ்சும் மக்களின் குரலாக நான் சட்டமன்றத்தில் ஒலிப்பேன்.
மேற்கு வங்கம் முழுவதும் தாமரை மலர வேண்டும் என்றும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வீழ்த்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை விமரிசித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, "தனது மகளின் மரணம் குறித்து சிபிஐ சரியாக விசாரணை நடத்தவில்லை என்று அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். அப்படி இருக்கையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவையே அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் அல்லது ஜனாதிபதியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
இவ்வளவு அலட்சியத்திற்குப் பிறகும் அவர் பாஜகவில் இணைந்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
2024, ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சந்தீப் ராய் என்ற ஒப்பந்த ஊழியரால் பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
சந்தீப் ராய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மமதா பானர்ஜி அரசுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயே தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.