கேரள கல்வித்துறை பள்ளி மாணவர்களின் புத்தக பையின் எடையை குறைக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தினசரி 3-4 பாடங்களில் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் அட்டவணை மாற்றம் செய்யப்படும். புத்தகங்கள் வீட்டிலும் பள்ளியிலும் பிரிக்கப்பட்டு, டிஜிட்டல் கற்றல் வசதிகள் வழங்கப்படும். இந்த திட்டம் 2027-28 கல்வி ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தொடங்கும்.
தொழில்நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை கண்ட போதிலும் நமது நாட்டில் பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை குறைந்தபாடில்லை. முன்பெல்லாம் பள்ளி மாணவர்களின் பாட புத்தகம் சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளே பல கிலோ எடையுள்ள புத்தகங்களை தூக்கிச் செல்கின்றனர்.
வகுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க புத்தகம்-நோட்டுகளின் எண்ணிக்கை மற்றும் எடை அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. ஒவ்வொரு புத்தகமும் மிகவும் பெரிதாக இருக்கிறது. பள்ளிக்கு அனைத்து பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளையும் மாணவர்கள் கொண்டு வரும்போது புத்தகப் பையின் எடை தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் புத்தகப் பையை மிகவும் சிரமத்துடனே பள்ளிக்கு தூக்கிச் செல்லும் நிலை இருக்கிறது. பள்ளி மாணவ-மாணவிகளின் இந்த கஷ்டத்தை போக்க கேரளம் மாநிலத்தில் கல்வித்துறை புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தகப்பை எடையை குறைக்க ஒரு அறிவியல் பூர்வமான திட்டத்தை கல்வித்துறை வகுத்துள்ளது.
கேரளம் மாநில கல்வி அமைச்சர் சம்சுதீன் தலைமையில் நடந்த துறை தலைவர்களின் உயர்மட்ட கூட்டத்தில் இந்த புதிய திட்டம் குறித்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதனை அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
புத்தக பையின் எடை பள்ளி மாணவரின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் முன்னோட்டம் 2027-28 கல்வி ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தொடங்கும். உள்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் வசதிகள் மற்றும் அவற்றில் நிர்வாகம் காட்டும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சுகாதாரம், உள்ளாட்சி, பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மேலாண்மை குழுக்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்கள் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 பாடங்களில் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி நேர அட்டவணை மறு சீரமைக்கப்படும். மாணவர்களுக்கு இரண்டு பாட புத்தக தொகுப்புகள் வழங்கப்படும். ஒரு தொகுப்பு வீட்டிலும், மற்றொன்று பள்ளியிலும் வைக்கப்படும். இது அவர்களின் அன்றாட பைகளின் எடையை குறைக்க உதவும்.
பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே குடிநீர் மற்றும் மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் மாணவர்கள் கூடுதல் பொருட்களை வீட்டிலிருந்து எடுத்து வர வேண்டியதற்கான அவசியம் நீங்கும். அச்சு பாட புத்தகங்களை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் ஸ்மார்ட் போர்டுகள் மூலம் பாடங்கள் காண்பிக்கப்பட்டு டிஜிட்டல் கற்றல் வசதிகள் விரிவுபடுத்தப்படும். இதுவே பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எடையை குறைப்பதற்கு கேரள மாநில கல்வித்துறை கொடுத்துள்ள புதிய திட்டத்தின் கூறுகளாகும்.
கல்வித்துறையின் இந்த திட்டத்தை செயல்படுத்த கேரளம் மாநில அரசும் முன்வந்துள்ளது. அதற்காக ஒரு பூர்வாங்க கட்டமைப்பை தயாரித்துள்ளது. அதன்படி கல்வித்துறை வகுத்துள்ள புதிய திட்டத்தின் சாத்தியக் கூறுகளை மதிப்பிடுவதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் மாநில அரசு ஒரு உயர்மட்ட குழுவை நியமித்துள்ளது.
அந்த குழுவில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம், கேரள கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம், பொதுக்கல்வி இயக்குனரகம் மற்றும் சமக்ரசிஷா கேரளா ஆகியவற்றின் இயக்குனர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.