கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கேரளம் மாநில முதல் மந்திரியாக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வி.டி.சதீசன் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். சட்டசபைத் தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கேரளம் முதல் மந்திரி வி.டி.சதீசன் சந்தித்து பேசினார். அப்போது கேரளம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாகவும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடன நாடகமான கதகளியை சித்தரிக்கும் ஒரு சிறிய நடனக் கலைஞரின் சிலையை முதல் மந்திரி சதீசன் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார்.