இந்தியா

'கேரளா' இனி 'கேரளம்': மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றம்!

இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 3 விதிகளின்படி, மாநிலங்களின் பெயரை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மக்களவையில் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் பதிலாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத் தீர்மானம்

மலையாள மொழியில் இந்த மாநிலம் எப்போதுமே 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. இதையேற்கும் வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று கேரள சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

அரசியலமைப்புத் திருத்தம்

இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 3 விதிகளின்படி, மாநிலங்களின் பெயரை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இதன் கீழ், அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் 'கேரளா' என்றிருப்பதை 'கேரளம்' என திருத்த இம்மசோதா வழிவகை செய்கிறது.

மத்திய கேபினட் ஒப்புதல்

2026 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இம்மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி மற்றும் கூச்சல்-குழப்பத்திற்கு இடையே எவ்வித விவாதமும் இன்றி இம்மசோதா நிறைவேறியது.

அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன் பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அரசாங்க இதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வரும்.