கேரளத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, பிணையில் வெளிவந்த இளைஞர் ஒருவர், புகாரளித்த சிறுமியை கத்தியால் தாக்கியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரும்பாவூர் அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது ஆதினன் (22) என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் பிணையில் வெளிவந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்.2) மதியம் இவர்மீது புகாரளித்த சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது சிறுமியின் அழுகுரல் சத்தம் கேட்டு, இதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளியை பெரும்பாவூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதால், முதலுதவிக்குப் பின், மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.