17 வயது சிறுமியிடம் தொடர்ச்சியாக பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்தது.
முஸ்லிம் மத சடங்குகளின்படி திருமணம் நடைபெற்று இருந்தாலும், அது அவரை POCSO சட்டத்தின் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம்) கீழ் வரும் குற்றப் பொறுப்பில் இருந்து காப்பாற்றாது என்று நீதிமன்றம் கூறியது.
மன்னார்க்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் தள்ளுபடி செய்தார். இவ்வழக்கு பட்டாம்பியில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
'இன்டிபென்டன்ட் தாட்' (Independent Thought) வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ளும் நபர், பாதிக்கப்பட்டவர் தனது மனைவியாக இருந்து, அவரது வயது 15 முதல் 18-க்குள் இருந்தாலும், இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 376-இன் கீழ் பாலியல் வன்முறை குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடியவர் என்று கூறியது.
"எனவே, இந்த வழக்கில், IPC பிரிவு 375-இன் விதிவிலக்கு 2-இன் உதவியுடன் குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது" என்று ஆகஸ்ட் 19 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது சட்டப்பூர்வமான மனைவி என்றும், இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி அவருக்கு 17 வயது ஒரு மாதம் ஆனபோது திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றவாளியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.
தனிநபர் சட்டத்தின்படி திருமணம் செல்லுபடியாகுமா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் மைனராக (சிறுவர்/சிறுமியாக) இருக்கும்போது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் (POCSO) பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.
திருமண உறவை சாக்காக கொண்டு குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வாதத்திற்காக, இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி திருமணம் நடைபெற்றதாக கொண்டாலும், அது மனுதாரர் மீதான குற்றவியல் பொறுப்பை நீக்காது. குறிப்பாக, அந்த திருமணம் மற்றும் அதை தொடர்ந்த பாலியல் செயல்களின் போது அப்பெண்ணுக்கு 17 வயது மட்டுமே இருந்ததால் இது பொருந்தும்.
"தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் சிறாராக இருந்தால், போக்சோ சட்டத்தின் விதிகள் பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மை," என்று நீதிமன்றம் கூறியது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-இன் பிரிவு 528-இன் கீழ் இந்த வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் கோரியிருந்தார்.
குற்றச்சாட்டு தரப்பின்படி, அக்டோபர் 23, 2021 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணை காரில் தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அக்டோபர் 23 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.