இந்தியா

ராகுல் காந்தி அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை: பினராயி விஜயன் தாக்கு

இந்தியா கூட்டணி இன்று ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளது என்றார்.

தலைநகர் டெல்லியில் கடந்த 8-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி, அரசியல் காரணங்களுக்காக கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயனை தன்னால் கட்டித் தழுவமுடியாது என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

யார் யாரைத் தழுவுகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் ராகுல் காந்தி நரேந்திர மோடியை தழுவும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

மோடியை தழுவிய செயலில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. மாறாக, அவரது கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகின்றன.

இது ராகுல் காந்தியின் அணுகுமுறையையும், இந்தியா கூட்டணியை அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது. இது குறித்து விரிவான விவாதம் தேவை. இந்தியா கூட்டணி இன்று ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளது.

நாங்கள் மட்டுமல்ல அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும் காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும்கூட கூட்டத்தின்போது ஆட்சேபணைகளை எழுப்பினார்கள். காங்கிரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகப் பேசினார்கள்.

தற்போதைய சூழல் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையாலும், குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறையாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையானது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்பதே உண்மை. இது பெரும்பாலும் பா.ஜ.க.வுக்கே உதவுகின்றது. இத்தகைய செயல்கள் மூலம் பா.ஜ.க.வின் நலன்களுக்கு சாதகமாக செயல்படும் ஒருவராக ராகுல் காந்தி மாறுகிறார் என தெரிவித்தார்.