கேரளம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய சட்ட மன்றத்துக்கான தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 9-ந்தேதி நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 40 நாட்களே இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் அரசு பள்ளி-அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்காக அவர்களுக்கு தனியாக ஊதியமும் வழங்கப்படும்.
தேர்தல் பணிக்கு ஏராளமானோர் தேவைப்படுவார்கள் என்பதால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்படுவார்கள். அரசால் தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக அதற்கு சென்று தான் ஆக வேண்டும் என்பதால் அந்த பணியை தவிர்க்க முடியாது.
உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாக சூழ்நிலை காரணமாக தேர்தல் பணிக்கு செல்ல முடியாது என்றால் அது தொடர்பாக உரிய விளக்கத்தை அதிகாரிகளிடம் கொடுக்கவேண்டும். இந்தநிலையில் கேரளம் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் நூதன கோரிக்கையை வைத்துள்ளார்.
அதாவது தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தேனிலவுக்கு திட்டமிட்டிருக்கும் நாளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தனக்கு தேர்தல் பணியை வழங்கி தனது தேனிலவை கெடுத்து விடக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள காக்கநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கும், திருவனந்தபுரம் இன்போபார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அவர்களது திருமணம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் தீவிரமாக செய்து வருகின்றனர். திருமணம் முடிந்ததும் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஏப்ரல் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 5 நாட்கள் தேனிலவுக்கு வெளிமாநிலத்துக்கு செல்கிறார்கள்.
அதற்கான பயணத் திட்டத்தை பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டார்கள். இதற்காக பயணச்சீட்டு மற்றும் தங்குவதற்கான அறை உள்ளிட்டவைகளை முன்பதிவு செய்துவிட்டனர். இந்தநிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆசிரியை தனது கணவருடன் தேனிலவுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நாளிலேயே கேரளத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆகவே தனக்கு தேர்தல் பணி வழங்கிவிடக்கூடாதே என்ற அச்சம் ஆசிரியைக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், திருமணம் நடைபெற இருப்பதால் தனக்கு தேர்தல் பணி வழங்கக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக கொச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரது மனுவில் தேர்தல் பணி என்ற பெயரில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட தனது தேனிலவு பயணம் தடைபட்டுவிடக்கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் ஆசிரியை வந்த நேரத்தில் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை. அவர் தேர்தல் பணி தொடர்பாக வெளியே சென்றுவிட்டார்.
இதனால் தனது கோரிக்கை மனுவை ஆசிரியையால் கலெக்டரிடம் நேரில் கொடுக்க முடியவில்லை. மிகவும் முக்கியமான கோரிக்கை என்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் நேரில் வழங்கி கூறினால் தான் நடக்கும் என்று ஆசிரியை கருதினார்.
இதனால் என்ன செய்வதென்று தவித்த ஆசிரியையை, நாளை (அதாவது இன்று) அல்லது நாளை மறுநாள் (அதாவது நாளை) வாருங்கள் என்று கூறி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறி அனுப்பி வைத்தனர்.