இந்தியா

"வாக்கு திருட்டால் வென்ற காங்கிரஸ்?" முதல்வர் சதீசனின் செயலாளராக கேரள தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - சி.பி.எம், பா.ஜ.க கண்டனம்

"அப்படியானால் கேரளாவில் இப்போது நடந்திருப்பது என்ன? இதுவும் அந்தத் திருட்டுக்கான பரிசுதானா

140 இடங்களை கொண்ட கேரள சட்டமன்றத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.

மே 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

பினராயி விஜயனின் இடது முன்னணி கூட்டணி இவரும் 35 இடங்களில் மட்டுமே வென்றது.

நீண்ட இழுபறிக்கு பின் கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் விடி சதீசன் கடந்த மே 18 அன்று பதவியேற்றார்.

இந்நிலையில் கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரத்தன் கேல்கர், முதல்வர் வி.டி. சதீசனின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பொறுப்பில் இருந்த ஒருவரை, நேரடியாக முதல்வரின் தனிப்பட்ட செயலாளராக நியமித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸின் தலைவர் முகமான ராகுல் காந்தியை சாடியுள்ளனர்.

முன்னதாக மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் அங்கு சுவேந்து அதிகாரி தலைமையில் அமைந்த பாஜக அரசால் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அப்போது ராகுல் காந்தி, "எவ்வளவு பெரிய திருட்டைச் செய்கிறீர்களோ, அவ்வளவு பெரிய பரிசு உங்களுக்குக் கிடைக்கும்" என்று விமர்சித்திருந்தார்.

தற்போது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சூழலில், அதே போன்ற ஒரு நியமனத்தை முதல்வர் வி.டி. சதீசன் செய்திருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிபிஎம் மூத்த தலைவர் பி. ராஜீவ் கூறுகையில், "தேர்தல் அமைப்பின் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் உறுதி செய்வதற்காகவே, ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்ற அனைத்து அரசுப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

ஆனால், தேர்தல் முடிந்தவுடன் அவரை முதல்வரின் செயலாளராக நியமித்திருப்பது மிகவும் தீவிரமான விஷயம்.

மேற்கு வங்க நியமனத்தை விமர்சித்த ராகுல் காந்தியும், காங்கிரசின் தேசியத் தலைமையும்தான் தற்போது கேரளாவில் நடந்துள்ள இந்த நியமனத்திற்குப் பதில் சொல்ல வேண்டும். தங்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் கருத்தைக் குறிப்பிட்டு, "அப்படியானால் கேரளாவில் இப்போது நடந்திருப்பது என்ன? இதுவும் அந்தத் திருட்டுக்கான பரிசுதானா?" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.