இந்தியா

மளிகைப் பொருட்கள் வாங்க மாதம் ரூ. 2,500 ரீசார்ஜ், இலவச சிலிண்டர்: கேரளாவில் பாஜக தேர்தல் அறிக்கை

தகுதியான பெண்கள், விதவைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3,000 நலத்திட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள மாநில சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி ஒரு கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் இடம் பிடித்துள்ள முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:-

* ஏழைப் பெண்களுக்கு மருந்துகள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மாதம் ரூ.2,500 ரீசார்ஜ் செய்யக்கூடிய பக்ஷ்ய ஆரோக்கிய சுரக்ஷா அட்டை வழங்கப்படும்.

* கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்

* திருவனந்தபுரத்தை கண்ணூருடன் இணைக்கும் அதிவேக ரெயில் பாதை அமைக்கப்படும்.

* ஏழை குடும்பங்களுக்கு ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின்போது தலா ஒன்று என, ஆண்டுக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும்.

* கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர் போன்ற வழிபாட்டுத் தலங்கள், தேவஸ்வம் வாரியங்களை மறுசீரமைப்பதன் மூலம் பாதுகாக்கப்படும்.

* முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு

* கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 20,000 லிட்டர் இலவச தண்ணீர் வழங்கப்படும்

* தகுதியான பெண்கள், விதவைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3,000 நலத்திட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.