இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மகளுக்கு 'கொலை மிரட்டல்'; பஞ்சாப் காவல்துறை வழக்குப்பதிவு

கொலை மிரட்டலை தொடர்ந்து தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மகள் ஹர்ஷிதா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் முன்னாள் முதல்வரும், அவரது மகளையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல்களும், 7 கோடி ரூபாய் கேட்டு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங், மொஹாலி காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், நவம்பர் 7 அன்று, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

எம்.எல்.ஏ. புகார்:

தனது புகாரில், நவம்பர் 6 அன்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ஒரு நபரிடம் இருந்து தனக்கு வாட்ஸ்அப் அழைப்பு மற்றும் செய்தி வந்ததாக ஜர்னைல் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 7 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் அவரும் அவரது மகள் ஹர்ஷிதாவும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் தகவல் அறிக்கையிலும் (FIR) இடம்பெற்றுள்ளது.

அந்த நபர், "நான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் இருந்து பேசுகிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சொல்லுங்கள், 7 கோடி ரூபாய் கொடுக்கட்டும்; இல்லையெனில், அவரும் அவரது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலும் கொல்லப்படுவார்கள்" என்று கூறியதாக ஜர்னைல் சிங் தெரிவித்துள்ளார்.

வலியுறுத்தல்:

"அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு முக்கிய பிரமுகர் என்பதால், இந்த மிரட்டல் தேசிய மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை பயன்படுத்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான குற்றமாகும்" என்று ஜர்னைல் சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே குற்றவாளியை கைது செய்ய, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அழைப்பு விவரங்கள், ஐபி பதிவுகள் மற்றும் சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்புடைய சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT