இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கச்சத்தீவை மீட்கக்கோரி அ.தி.மு.க., தி.மு.க, மீனவர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் மீனவர்கள் அமைப்பு சார்பாக வக்கீல் ஜெய்சுகின் ஆஜராகி வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வக்கீல் ஹரிப்பிரியா ஆஜர் ஆனார். அவர் வாதிடுகையில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள், இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வக்கீல் கச்சத்தீவு விவகாரத்தை பொருத்தவரை இலங்கை, இந்தியா நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான விவகாரம் என்பதால் இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.
அப்போது தி.மு.க.வின் டி.ஆர்.பாலு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கச்சத்தீவு விவகாரம் இரு நாடுகளின் ராஜாங்க ரீதியிலானது. அதே வேளையில் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.