கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரின் உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஜேந்திரா என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சைத்ராவுக்கு ஷிவு என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பார்கள் என்று அஞ்சிய சைத்ரா, அவர்களை விஷம் வைத்து கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
உணவு மற்றும் காபியில் நச்சு மாத்திரைகள் மற்றும் பிற பொருட்களைக் கலந்து கொடுத்ததால், குடும்பத்தினருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
கணவர் கஜேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பெலூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் சைத்ரா வேண்டுமென்றே உணவில் தூக்கமாத்திரை கலந்தது உறுதி செய்யப்பட்டது.
சைத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கள்ளக்காதலன் ஷிவு தலைமறைவாக உள்ளார்.