பருவமழை சரியாக பெய்யவில்லை என்பதால் அணைகளில் நீர் இல்லை. அதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.
தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதியன்று திறப்பது வழக்கமாகும். ஆனால் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு மேட்டூர் அணையை திறக்கவில்லை.
எனவே, தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ரூ.77.50 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. தற்போது டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதால், விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் இந் தத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கிடையில், தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் எவ்வளவு பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கணக்கெடுத்து வருகிறது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 93 ஆயிரத்து 470 மில்லியன் கனஅடியாகும். கடந்த ஆண்டு இதே நாளில் அணை முழு கொள்ளளவை எட்டியிருந்தது. ஆனால் தற்போது 38 ஆயிரத்து 359 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. ஒரே ஆண்டில் 55 ஆயிரத்து 111 மில்லியன் கனஅடி நீர் குறைந்துள்ளது. இருப்பினும், மேட்டூர் அணை திறக்கப்படுமா? என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அணை நிரம்பினால்தான் நீர் திறக்கப்படும் என்ற நிலையில் தமிழக அரசு உள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமா? என்றால். இயற்கையின் கையில்தான் அது இருக்கிறது. தற்போதைய நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் தரும் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 35.1 சதவீத நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு 91.7 சதவீத நீர் இருந்தது. இந்த நான்கு அணைகளின் மொத்த கொள்ளளவு 1 லட்சத்து 14 ஆயிரத்து 571 மில்லியன் கனஅடியாகும். ஆனால் தற்போது 40 ஆயிரத்து 230 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.
இந்த அணைகள் நிரம்ப வேண்டுமென்றால் சிறிய மழை போதாது. நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் 2 வாரங்களுக்கு சுமார் 400 முதல் 600 மில்லிமீட்டர் அளவுக்கு பரவலான மழை பெய்தால்தான் இந்த 4 அணைகளும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடகம் ஜூன் மாதத்தில் 9.91 டி.எம்.சி. நீரும், இந்த (ஜூலை) மாதத்தில் 32 டி.எம்.சி. நீரும் தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை.
இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியதாவது:-
கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகள் நிரம்பவில்லை. எனவே தமிழகத்துக்கு இப்போதைக்கு நீர் தர இயலாது. தமிழகத்திற்கு நீர் தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியமும் எங்களுக்கு உத்தரவிடவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் நீர் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு இவ்வளவு நீர் கர்நாடகம் தர வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், எங்களிடம் தருவதற்கு போதிய நீர் இல்லை. எப்போது தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும் என்று கேட்டால், அது மழை பெய்வதை வைத்து சொல்ல முடியும். இப்போது வரை நல்ல மழை பெய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.