இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவிப்பு!

மீதியுள்ள ஆட்சிக்காலம் வரை முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுக்கொடுக்க சித்தராமையா முடிவெடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

2023 தேர்தலில் காங்கிரஸ் வென்றபோது சித்தராமையா பாதி ஆட்சி கலாமும், டிகே சிவகுமார் பாதி ஆட்சிக் காலமும் முதல்வராக இருப்பதாக முடிவானது.

ஆனால் பாதி ஆட்சிக் காலம் முடிவடைந்தபோதிலும் சித்தராமையா முதல்வர் பதவியில் நீடித்தார். இது சிவகுமார் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில் மீதியுள்ள ஆட்சிக்காலம் வரை முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுக்கொடுக்க சித்தராமையா முடிவெடுத்துள்ளார்.

சித்தராமையா இன்று காலை தனது அதிகாரபூர்வ இல்லத்தில் காலை உணவுக் கூட்டம் நடத்தினார். இதில் டிகே சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிவகுமார், சித்தராமையாவின் கால்களை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் காலை உணவு கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

முதல்வர் பதவியைத் துறப்பதற்குத் தனக்கு மனதிற்குள் எந்தவித வருத்தமும் இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இத்தனை காலம் தனக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அமைச்சரவை சககாக்கள், காங்கிரஸ் மேலிடம் மற்றும் மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், நடப்பு அமைச்சரவையைக் கலைக்கப் போவதாகவும், இன்று பிற்பகல் 3 மணியளவில் மாநில ஆளுநரைச் சந்திக்க அனுமதி பெற்றுள்ளதாகவும், அந்தச் சந்திப்பின் போது தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரைச் சந்தித்து சித்தராமையா தனது ராஜினாமாவை சமர்ப்பித்தவுடன், புதிய முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தராமையாவின் இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு கர்நாடகா மட்டுமன்றி தேசிய அளவிலும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.