இந்தியா

மேகதாது விவகாரம்: ஆக. 3-இல் தமிழ்நாடு - கர்நாடக முதலமைச்சர்கள் சந்திப்பு

பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம்.

தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், சந்திப்புக்கான நேரம் கோரி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திக்க கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடிதம்:

முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், விஜய் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு சந்திப்பு கோரி சிவகுமாருக்குக் கடிதம் எழுதி இருந்ததாகவும், ஆகஸ்ட் 03-ஆம் தேதி வருமாறு சிவகுமார் அனுப்பிய கடிதம் அந்த வேண்டுகோளுக்கான பதில் மட்டுமே என்றும் தெரிவித்தன.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடு குறித்து தமிழ்நாடு தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி, அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அதற்கான நேரம் ஒதுக்குமாறு கோரியிருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உறுதிப்படுத்தவில்லை:

"ஜோசப் விஜய் தனது வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சிவகுமார் அவரது கடிதத்திற்கு பதில் மட்டுமே அளித்துள்ளார்," என்று சிவகுமாருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

காவிரி நதிநீர் பகிர்வு மற்றும் சிவகுமாரின் சட்டமன்ற தொகுதியான கனகபுராவில் அமையவுள்ள மேகதாது சமநிலை நீர்த்தேக்க திட்டம் (தமிழ்நாடு இத்திட்டத்தை வலுவாக எதிர்த்து வருகிறது) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்மானம்:

முன்னதாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக சட்டசபையிலும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.