இந்தியா

இன்று ஆளுநரை சந்திக்கும் சித்தராமையா.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு!

அடுத்த வாரமே அவரது பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

வெற்றிக்கு இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளதாலும், இருவரும் தங்களுக்கென தனி செல்வாக்கு கொண்டுள்ளதாலும் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் போட்டி நிலவியது.

ஆட்சியின் முதல் பாதி சித்தராமையா, இரண்டாம் பாதி சிவகுமார் முதல்வராக இருக்கட்டும் என காங்கிரஸ் தலைமை சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஆட்சியின் முதல் பாதி முடிந்தபோதும் சித்தராமையா தனது நாற்காலியை விட்டுத் தர தயங்கியதால் சிவகுமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். விவகாரம் பல மாதங்களான டெல்லியில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலக சித்தராமையா சம்மதித்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11:30 மணியளவில் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்திக்கச் சித்தராமையா நேரம் கேட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி ஒப்படைப்பார் என்று கூறப்படுகிறது.

அவருக்குப் பிறகு, டி.கே. சிவகுமார் அடுத்த புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், அடுத்த வாரமே அவரது பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் இரு தலைவர்களும் நடத்திய அவசர ஆலோசனையைத் தொடர்ந்தே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக, சித்தராமையா இன்று காலை 9 மணிக்குத் தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘காவேரி’யில் அமைச்சரவை உறுப்பினர்களுக்காகக் காலை உணவுடன் கூடிய அவசரக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இக்கூட்டத்தில் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்திற்குப் பிறகே அவர் ஆளுநரைச் சந்திக்கச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.