இந்தியா

முதல்வர் டி.கே. சிவகுமார் தான்.. ஆனால் அமைச்சரவையில் சித்தராமையா ஆதிக்கம் - முழு விவரம்

அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.

2023 தேர்தலில் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஆட்சியின் முதல் பாதியில் முதல்வராக இருந்த சித்தராமையா நீண்ட இழுபறிக்கு பின் தனது பதவியை அண்மையில் விட்டுக்கொடுத்தார்.

அதனுடன் கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 12 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தலித் சமூகத்தின் முக்கிய முகமான ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகப் பதவியேற்றார்.

புதிய அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது.

சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் பலருக்கும், அவரது மகன் யதீந்திர சித்தராமையாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.

மாநிலத்தில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு தலா 3 இடங்களும், பட்டியல் சாதியினருக்கு 3 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

குருபா சமூகத்திற்கு 2 இடங்களும், பழங்குடியினர், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு தலா 1 இடமும் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலவை உறுப்பினர் பி.கே. ஹரிபிரசாத் கர்நாடக காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் மொத்த அனுமதிக்கப்பட்ட அமைச்சரவை பலம் 34 ஆகும். இதனால், வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்ற உடனே முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் முதல் முதுகலை படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும்.