ஏடிஎம் வாகன கொள்ளை 
இந்தியா

ஏடிஎம் வாகன கொள்ளை.. பீகாரில் பக்தர்கள் போல வேடமிட்டு குற்றவாளிகளை பிடித்த கர்நாடக போலீஸ்

கர்நாடக போலீசார் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவலரை கொன்றுவிட்டு வங்கி ஏடிஎம் பணம் ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்ளையடித்த குற்றவாளிகள் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளை

2025, ஜனவரி 16 அன்று கர்நாடக மாநிலம் பிடாரில் உள்ள சிவாஜி சௌக் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் முகமூடியுடன் வந்த இருவர் தாக்குதல் நடத்தினர்.

மிளகாய் பொடியை பொடியைத் தூவி, துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுச் சுமார் ரூ.98 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் கிரி வெங்கடேஷ் என்ற பாதுகாப்பு காவலர் உயிரிழந்தார். சிவகுமார் என்ற மற்றொரு காவலர் காயமடைந்தார்.

கொள்ளைச் சம்பவம் நடந்த அதே நாளில் மாலையில், ஐதராபாத்தில் பேருந்து ஏற முயன்றபோது சந்தேகமடைந்த டிராவல்ஸ் மேனேஜர் ஜஹாங்கீர் என்பவரையும் இவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.

கர்நாடக போலீசார் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கைது

இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் மற்றும் அவரது கூட்டாளி அலோக் குமார் என போலீசார் கண்டறிந்தனர்.

கர்நாடகா தவிரத் தெலங்கானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் இவர்கள் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதைத்தொடர்ந்து கர்நாடகக் காவல் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் முகாமமிட்டனர்.

சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க சில அதிகாரிகள் யாத்திரை செல்லும் பக்தர்கள் வேடத்தில் அப்பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக உலா வந்து தீவிரமாகக் கண்காணித்தனர்.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) அன்று தாமோதர்பூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல் துறையினர் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.