இந்தியா

ஷார்ஜாவில் கொடூரம்: கர்நாடகாவை சேர்ந்த நபர் 9 துண்டுகளாக வெட்டிப் படுகொலை- மனைவி, மகன் மாயம்!

ஓமன் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் அல்வின் பிரகாஷ் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் கர்நாடகாவைச் சேர்ந்த விமான நிலைய ஊழியர், 9 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் காரில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபூர் பகுதியை சேர்ந்தவர் அல்வின் பிரகாஷ் குந்தர். இவரது மனைவி டினா குந்தர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அல்வின் பிரகாஷ் குந்தர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அல்வின் பிரகாஷ் குந்தர் ஷார்ஜா விமான நிலையத்தின் ஊழியராகவும், அவரது மனைவி டினா குந்தர் ஷார்ஜாவில் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றினர். அவர்களது மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த ஜூலை 20-ந் தேதி அல்வின் பிரகாஷின் சகோதரர் அனில் பிரசாந்த் அல்வின் பிரகாசை போனில் அழைத்துள்ளார். ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை. மாறாக அவரிடம் இருந்து தான் நலமாக இருப்பதாக ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனில் பிரசாந்துக்கு வந்தது.

வழக்கமாக அல்வின் பிரகாஷ் போன் அழைப்பை ஏற்காவிட்டால் வாய்ஸ் மெசேஜ் மட்டுமே அனுப்பு வாராம். ஆனால் அவரிடம் இருந்து வழக்கத்திற்கு மாறாக வெறும் மெசேஜ் மட்டும் வந்ததால் அனில் பிரசாந்த் சந்தேகம் அடைந்தார்.

ஒரு வாரம் கழித்து அனில் பிரசாந்த் மீண்டும் தனது சகோதரரை செல்போனில் அழைத்தபோதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என கருதிய அனில் பிரசாந்த் ஷார்ஜாவில் உள்ள தனது சகோதரரின் நண்பரான மனோகரை தொடர்பு கொண்டு விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உடனே மனோகர் அல்வின் பிரகாசின் வீட்டிற்கு சென்றார். அங்கு காவலாளி மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் கேட்டபோது, அல்வின் பிரகாஷ் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அல்வின் பிரகாசின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு மனோகர் கேட்ட போது, அவர்களும் அல்வின் பிரகாஷ் இந்தியா வுக்கு சென்றிருப்பதாகவே கூறியுள்ளனர்.

ஆனால் அவர் இந்தியா வரவில்லை என மனோகர் கூறியதோடு, அவர் எங்கே இருக்கிறார் என சரிபார்க்குமாறு நிறுவனத்தினரை கேட்டுக் கொண்டார். அதன்படி நிறுவனத்தினர் அல்வின் பிரகாசின் பாஸ்போர்ட் விபரங்களை சரிபார்த்தபோது அவர் ஷார்ஜாவிலேயே இருப்பது தெரிய வந்தது.

இதனால் அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஓமன் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் அல்வின் பிரகாஷ் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு 2 பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவரது மனைவி, மகன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நிறுவனத்தினர் கர்நாடகாவில் உள்ள அல்வின் பிரகாசின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுதொடர்பாக உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், அல்வின் பிரகாசின் மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தனர்.

இதற்கிடையே அல்வின் பிரகாசின் கொலைக்கான காரணம் என்ன? அவரை கொன்றவர்கள் யார்? அவரது மனைவி, மகன் எங்கே? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அல்வின் பிரகாசின் மார்பில் பலமான கத்திக்குத்து உள்ளது. மேலும், அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டிருப்பதால் அனுபவம் வாய்ந்த குற்றவாளிகள் இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அல்வின் பிரகாஷ் உடல் மீட்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 ஆண்களும், ஒரு பெண்ணும் கட்டிடத்தில் இருந்து வெளியேறுவது போன்று காட்சிகள் உள்ளது. அதன் மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அல்வின் பிரகாசின் மனைவி, மகன் கதி என்ன ? அவர்கள் இந்தியா திரும்பிவிட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT