அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர் கபில் சிபில், வார்த்தைகள் ஒரு பொருட்டல்ல என்றும் செயல்களே பேசப்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.
வெளிநாட்டில் ஞானமான வார்த்தைகளை பேசுவது ஒரு பொருட்டல்ல என்றும், நமது வார்த்தைகளை விட நமது செயல்களே பேச வேண்டும் என்றும் கூறினார்.
நியூயார்க்கில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்கள் தொடர்புத் திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது.
'ஒரே உலகம் ஒரே மனிதநேயம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அப்போது மோகன் பகவத் தனது ஒரு மணி நேர உரையில், பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர், “இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. உண்மையறிந்தவர்கள், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள்.
இந்த வெளித்தோற்ற வேறுபாடுகள் இயற்கையை மட்டுமே அலங்கரிக்கின்றன, அவ்வளவுதான். அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், நாம் அனைவரும் ஒன்று என்பதே அடிப்படை உண்மை.
பிரிவினையின் மாயைகள் நீடிக்கலாம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை செழிக்கவும் கூடும், ஆனால் இறுதியில் அவை மங்கிவிடும்; புதிய மாயைகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.
மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். நான் ஒரு மத அறிஞரோ, மத அதிகாரியோ அல்ல” என்று கூறினார்.
இந்த நிலையில் மோகன் பகவத்தின் கருத்து குறித்து கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் கபில் சிபில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'பன்முகத்தன்மை என்பது நமது இயல்பான ஒற்றுமையின் ஓர் அணிகலன்; அது பாதுகாக்கப்பட வேண்டும்'. வெளிநாட்டில் ஞானம் பொதிந்த வார்த்தைகள், ஆனால் உள்நாட்டிலோ மௌனம். வெறும் வார்த்தைகள் முக்கியமல்ல, செயல்களே பேச வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.