இந்தியா

‘ஜிது முண்டா குடித்திருந்தார்’ - வங்கி நிர்வாகம் புதுத் தகவல்!

ஜிது முண்டா மதுபோதையில் இருந்ததே அவர் அவ்வாறு செய்ததற்கு காரணம் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கிராமப்புற மக்கள் வங்கிகளில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் வெளிச்சம்போட்டு காட்டியது.

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீது முண்டா (52) இறந்த தனது சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பிய நிலையில், அவர் மதுபோதையில் இருந்ததே இச்சம்பவத்திற்கு காரணம் என வங்கி நிர்வாகம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

ஜீது முண்டாவின் சகோதரி கல்ரா முண்டா (56) கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் அவருக்கு முன்பே இறந்ததால், தனது தம்பியுடன் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அவரும் இறக்க, அவரது வங்கிக் கணக்கில் இருந்த சுமார் ரூ.19,000 பணத்தை எடுப்பதற்காக ஜீது முண்டா முயற்சி செய்து வந்தார்.

ஆனால் ஜிதுமுண்டா பலமுறை வங்கி ஊழியர்களால் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் சகோதரி இறந்துவிட்டதை நிரூபிப்பதற்காக ஏப்ரல் 27 அன்று அவரது கல்லறையைத் தோண்டி எலும்புக்கூட்டை ஒரு பையில் போட்டு வங்கிக்கு எடுத்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அவருக்குத் தேவையான ஆவணங்களை விரைவாக வழங்கியது. இதனையடுத்து தற்போது வங்கி நிர்வாகம் அவரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில் அவர் முதலில் வங்கிக்கு வந்தபோது மதுபோதையில் இருந்ததாகவும், வாரிசு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் தகராறு செய்ததாகவும் வங்கி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதனை கேட்கும் இணையவாசிகள் பலரும், இது வங்கியின் தவறை மறைக்க, அவர்மீது வேண்டுமென்றே சுமத்தப்படும் குற்றச்சாட்டு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.