ஜார்க்கண்ட் மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 21-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தன்று 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.
அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.
அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.
'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றத்தின்' கீழ் போராடும் மாணவர்கள், பணி நியமன தேர்வுகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பல தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் சி.பி.ஐ. அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் மூலம் சுதந்திரமான விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) குறித்தும் போராட்டக்காரர்கள் ராஞ்சி மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
தடை உத்தரவுகளை மீறியது, அரசு சொத்துக்களுக்குசேதம் விளைவித்தது மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அடையாளம் தெரியாத சுமார் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படவோ இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.