இந்தியா

ஜார்கண்டில் கனமழை: மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது

ஜார்கண்ட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்குதல்

தலைநகரான ராஞ்சியின் பித்தோரியா பகுதியில், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இருவர், கர்வோ மாவட்டத்தில் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய ஒரு பெண், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் மின்னல் தாக்கி பலியாகினர்.

சத்ரா மாவட்டத்தின் சதர் பகுதியில் ஈக்கோ பூங்காவில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளி, கிரிதி மாவட்டம் ராஜ் தன்வார் பகுதியில் 10 வயது சிறுவன், ராஜ்நகர் பகுதியில் கனமழையிலிருந்து தப்பிக்க ஒரு குடிசையில் தஞ்சமடைந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் மின்னல் தாக்கி பலியாகினர்.

அவருடன் இருந்த 9 வயது மகளும், 60 வயது தந்தையும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்மாதர் பகுதியில் தனது தந்தையுடன் வயல்வெளிக்குச் சென்ற 10 வயது சிறுவனும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதிர்ஷ்டவசமாக அவனுடன் இருந்த தந்தையும் மற்ற இரு குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.