இந்தியா

ஜார்க்கண்ட் போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 11 பேர் குழு அமைப்பு

ஹேமந்த் சோரன் கூறிய மறுநாளே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆள்சேர்ப்பு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் 13-வது நாளை எட்டியது.

இதில் ஆறு போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்; அதேவேளையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

மாலை வரை அரசிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று மாணவர் தலைவர்கள் கூறியதால், இந்தப் போராட்டம் தொடர்பான இழுபறி நிலை நீடிக்கிறது.

11-பேர் குழு:

ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் 'JPSC-JSSC சீர்திருத்த மன்றம்' (JPSC-JSSC Reforms Manch) என்ற அமைப்பின் கீழ் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், சமீப காலங்களில் மாநிலத்தில் மாணவர்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

"போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை ஏற்று, எட்டு மாணவர்கள், இரண்டு நிபுணர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை நாங்கள் அமைத்துள்ளோம்," என்று JPSC-JSSC சீர்திருத்த மன்றத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்று முதல்வர் ஹேமந்த் சோரன் கூறிய மறுநாளே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சந்திப்பு:

அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் சுதிவ்யா குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசு குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஞ்சி துணைப் பிரிவு அதிகாரி குமார் ரஜத் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (சட்டம்-ஒழுங்கு) தனஞ்சய் குமார் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தனர்.

"எங்கள் தம்பிமார்களுடன் உரையாடுவதற்கும், அவர்களின் நலம் விசாரிப்பதற்கும் நாங்கள் இங்கு வந்தோம்," என்று துணைப் பிரிவு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். மாணவர் குழுவுடன் ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேட்டதற்கு, "இல்லை" என்பதே அவரது பதிலாக இருந்தது.