இந்தியாவின் மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்களான ஐஐடிகள், என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் (ஜெ.இ.இ) நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவார்கள்.
நடப்பாண்டு தேர்வு
நடப்பாண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே 17 அன்று CBT முறையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தாண்டு சுமார் 1.79 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று (ஜூன் 1) அறிவித்தபடி வெளியானது. முடிவுகளின்படி தேர்வெழுதிய 1.79 லட்சம் மாணவர்களில் 56,880 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
முதல் 3 இடங்களை டெல்லி ஐஐடி மண்டல மாணவர்கள் பிடித்துள்ளனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த மாநிலத்தில் இருக்கும் ஐஐடியின் கீழ் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல வாரியான விவரம்
அந்த வகையில் இந்த தேர்வில், 14,294 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி மெட்ராஸ் மண்டலம் முதலிடத்திலும், 12,389 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி பாம்பே மண்டலம் இரண்டாம் இடத்திலும், 10,697 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி டெல்லி மண்டலம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
5,637 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி ரூர்க்கி, 5,552 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி கான்பூர், 5,428 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி புவனேஸ்வர், 2,883 மாணவர்கள் தேர்ச்சியுடன் ஐஐடி கவ்ஹாத்தி ஆகியவை அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
அகில இந்திய அளவில் முதல் 500 ரேங்க்களைப் பிடித்த மாணவர்களில் 174 மாணவர்கள் (34.8%) உடன் ஐஐடி மெட்ராஸ் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.
ஐஐடி பாம்பே மண்டலம் 120 மாணவர்களுடன் இரண்டாமிடத்திலும், ஐஐடி டெல்லி மண்டலம் 114 மாணவர்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.