இந்தியா

JEE Advanced தேர்வு முடிவுகள் வெளியீடு - 360-க்கு 330 மதிப்பெண் பெற்று மாணவர் முதலிடம்

தேர்வெழுதிய 1.79 லட்சம் மாணவர்களில் 56,880 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியாவின் மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்களான ஐஐடிகள், என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் (ஜெ.இ.இ) நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவார்கள்.

நடப்பாண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே 17 அன்று CBT முறையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தாண்டு சுமார் 1.79 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று (ஜூன் 1) அறிவித்தபடி வெளியாகி உள்ளது.

www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் உள்ள 'JEE Advanced 2026 result' என்ற லிங்க்கை கிளிக் செய்து தங்கள் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி தேர்வெழுதிய 1.79 லட்சம் மாணவர்களில் 56,880 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

முதல் 3 இடங்களை டெல்லி மண்டல மாணவர்கள் பிடித்துள்ளனர். சுபம் குமார் என்ற மாணவர் 360 மதிப்பெண்களுக்கு 330 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கபீர் சில்லார் என்ற மாணவர் 329 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஜதின் சாஹர், 319 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.