டெல்லி ஜந்தர் மந்தரில் 'சீசன் 2', அதாவது இரண்டாம்கட்ட போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான்பூச்சி ஜனதாக கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.
இருப்பினும் எதன் காரணமாக இப்போராட்டம் என அவர் விளக்கவில்லை.
"ஜந்தர் மந்தரில் சீசன் 2 போராட்டம் எப்போது தொடங்கும் என இன்ஸ்டாகிராமில் பலரும் கேட்டு வருகின்றனர். மிக விரைவில் ஜந்தர் மந்தரில் சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.
சிஜேபி முதன்மை செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், சுதந்திர தினம் முதல் கல்விப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடு தழுவிய அளவில் மக்களின் கருத்துக்களைக் கேட்கும் பிரச்சாரம் மற்றும் லிசனிங் டூர் தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டெல்லியில் சிஜேபி கூட்டங்களை நடத்தவிடாமல் சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லியின் நாராயணா பகுதியில் சிஜேபி தன்னார்வலர்கள் கூட்டத்திற்காக அரங்கம் ஒன்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கூட்டம் நடைபெறவிருந்த நாளன்று கடைசி நேரத்தில் அரங்கின் உரிமையாளர் முன்பதிவை ரத்து செய்து, உள்ளே நுழைய அனுமதி மறுத்துவிட்டார்.
ஆளும் பாஜகவின் அழுத்தத்தின் காரணமாகவே இது நடந்துள்ளதாக அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் வேறு இடங்களைத் தேடியபோதும் யாருமே அரங்கை வாடகைக்குத் தர முன்வரவில்லை என்றும், மேலிடத்து அழுத்தம் உள்ளது என அனைவரும் கூறியதாகவும் தீப்கே தெரிவித்தார்.
"இறுதியாக ஒரு இடத்தை முடிவு செய்தோம். ஆனால், கூட்டத்தின் அன்றைய நாள் காலையில் அந்த அரங்கின் உரிமையாளருக்கு கடுமையான மிரட்டல் வந்தது.
சிஜேபி கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தலைகீழாகத் தொங்கவிடப்படுவீர்கள் என்றும் மிரட்டியுள்ளனர்" என தீப்கே பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் சிஜேபி நடத்திய போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.